கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டரை மாதங்கள் கழித்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இன்று (ஜூன் 8) டெல்லியில் திறக்கப்பட்டன.
ஜமா மஸ்ஜித், சாய் பாபா கோயில், குருத்வாரா சிஸ்கஞ்ச் சாஹிப் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள் இன்று (ஜூன் 8) மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், அதிகாலையில் ஜமா மஸ்ஜித்தில் அதிகமான பக்தர்கள் காணப்படவில்லை.
இந்நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எல்லா தலங்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, பக்த்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில், குருத்வாரா சிஸ்கஞ்ச் சாஹிப்பில் கரோனா தொற்றைத் தடுக்கும் பொருட்டு, குருத்வாராவுக்குள் செல்ல கிருமிநாசினி சுரங்கப்பாதை வழி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குருத்வாரா சிஸ்கஞ்ச் சாஹிப் தலைவரான கியானி ஹர்னம் சிங் கூறுகையில், ' நாள் முழுவதும் இங்கு செய்யப்படும் ஏற்பாடுகளைக் கவனிப்பது, எனது கடமை. அரசு வெளியிடும் ஒவ்வொரு வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றுகிறோம். இங்கு ஒரு சுத்திகரிப்பு சுரங்கம் நிறுவப்பட்டுள்ளது.
தகுந்த இடைவெளியை உறுதி செய்வதற்காக, 20 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை இங்கு அனைத்தும் சுத்தம் செய்யப்படுகிறது' எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகம் உணவகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் ஜூன் 8ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறியிருந்தது. அதேசமயம் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் இந்த தளர்வுகள் செல்லாது என்றும் கூறியுள்ளது.