பிரபல ஆர்.ஜே. நட்சத்திரமான சயிமா, அரசியல்வாதிகள் குறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள். அவர்களிடம் மக்களைப் பிளவுபடுத்தி அழிக்கும் நோக்கங்கள்தான் உள்ளன. இவர்கள்தான் தேசத்தின் உண்மையான அச்சுறுத்தல்கள்” எனத் தெரிவித்திருந்தார். ஆர்.ஜே. சயிமாவின் இந்தக் கருத்து காட்டுத்தீ போல் பரவியது. பலரும் அவரின் கருத்துக்கு ஆதரவு, ரீ ட்வீட் செய்தனர். இதனால் சயிமாவின் கருத்து சிறிது நேரத்தில் வைரலானது.
இந்தக் கருத்து டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து சயிமாவின் கருத்தை ரீ ட்வீட் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அதற்குப் பதிலும் அளித்துள்ளார். அந்தப் பதிலில், “அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் அல்ல. தற்போது நன்கு படித்த இளம் ஆற்றல்மிகு நேர்மையான தேசப்பக்தி கொண்ட புதிய அரசியல் இனம் ஒன்று உள்ளது. அவர்கள் நாட்டின் கல்வி, சுகாதாரம், மின்சாரம், நீர் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்காகவும் வேலை செய்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.