உலகளவில் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால், சானிடைசர், கிருமிநாசினிகள், முகக் கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, அடிக்கடி சானிடைசர், கிருமிநாசினியைப் பயன்படுத்துமாறு மருத்துவத்துறை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க உள்ளங்கையைச் சுத்திகரிக்கும் இந்தக் குளுமைத் தரும் சானிடைசர்கள் எளிதில் தீயை உண்டாக்கும் வாய்ப்புள்ளது.
எப்படி என்று புரியவில்லையா? இந்தக் கிருமிநாசினிகளில் ஆல்கஹால் கலந்திருப்பதே தீப்பற்றுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கிருமிநாசினிகள், சானிடைசர் உற்பத்தி செய்யும் துறை சார்ந்த வல்லுநர்கள். நாடு, தற்போது சந்தித்துவரும் இந்த நெருக்கடியான சமயத்தில், பலரும் ஆல்கஹால் கலந்த சானிடைசர், கிருமிநாசினிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இவை நோய்ப் பரவலைத் தடுக்க உதவினாலும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இவற்றால் ஆபத்து ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அமெரிக்காவின் ’நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில், இது குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளது.
வெளியில் செல்லாமல் வீட்டுக்கு உள்ளேயே இருப்பவர்களும் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்பதே மருத்துவ பணியாளர்களின் பரிந்துரை. பொதுவாக மக்கள் சோப்புகளைவிட இதுபோன்ற ஆல்கஹால் கலந்து கிருமிநாசினிகளை பயன்படுத்தவே விரும்புகின்றனர்.
ஏனென்றால், சோப்புகளைப் பயன்படுத்துவதற்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சானிடைசர், கிருமிநாசினிகளில் 60 முதல் 90 விழுக்காடு வரை ஆல்கஹால் உள்ளது. இதைப் பயன்படுத்தியப் பின்பு, உடனேயே எரிவாயு அடுப்பையோ அல்லது தீக்குச்சியையோ பற்றவைக்க முயன்றால், ஆல்கஹாலானது கைகளையே எரித்துவிடும் அபாயம் உள்ளது.
எந்த அளவுக்கு இவற்றில் ஆல்கஹால் உள்ளதோ அந்தளவுக்கு தீப்பற்றும் அபாயம் உருவாகும். ஆல்கஹால் கலந்த சானிடைசர், கிருமிநாசினிகளால் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று சி.டி.சி., வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.