2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்தது. இந்த முதலீடானது, மத்திய அமைச்சரவையின் அனுமதி பெறாமல் நடைபெற்றதாகவும், இதற்கு கைமாறாக கார்த்தி சிதம்பரம் தன் நிறுவனங்களுக்கு பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு இதனையடுத்து, சிபிஐயும், அமலாக்கத்துறையும் கடந்தாண்டு ஜூலை 19ஆம் தேதி ப.சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்குமாறு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த வழக்கை ஆகஸ்ட் 30ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்தார். அப்போது, ப.சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் உள்ளதால் ஏர்செல் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று சிபிஐயும், அமலாக்கத்துறையும் கோரிக்கை வைத்தனர்.
ப. சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் இதைத் தொடர்ந்து நீதிபதி சைனி, மனுதாரர்களின் முன் ஜாமின் குறித்து செப்டம்பர் 3ஆம் தேதி உத்தரவிடப்படும் எனவும், அதுவரையில் கைது நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடுமையாக வாதம் செய்த சிபிஐயும், அமலாக்கத்துறையும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது என்றனர். மேலும், இருவருக்கும் முன் ஜாமின் கொடுத்தால் முக்கிய ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் எனவும், எனவே இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்தது.
சிபிஐ காவலில் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ள இருவரையும் கைது செய்யலாம் எனவும், அதற்கு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்காமல் இருக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை நீதிபதி சைனியிடம் முறையிட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனுவுக்கான தீர்ப்பை வரும் வியாழக்கிழமை வழங்குவதாகக் கூறி ஒத்திவைத்தார்.