கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர். சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்குச் சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், உள்நாட்டு விமான சேவைகளையும் மே 25ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் விமானத்தில் புறப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், ஏர் இந்தியாவில் பாதுகாப்பு படை வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர் மே 25ஆம் தேதி டெல்லியிலிருந்து லூதியானாவுக்குச் சென்ற விமானத்தில் பயணம் செய்தார். இவரை சோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதியானதால், தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவருடன் பயணித்த அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக, சென்னையிலிருந்து கோவை சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையும் படிங்க:லடாக் எல்லை விவகாரம் : இந்திய-சீன உறவில் விரிசல்