தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா அரசுக்கு வந்த ஆசை! ஏர் இந்தியாவுக்கு கூடிய 'திடீர்' மவுசு - ரூ.1600 கோடி நிர்ணயம்

மும்பை: தென் மும்பையில் உள்ள ஏர் இந்தியக் கட்டடத்தை ரூ.1400 கோடிக்கு வாங்க மகாராஷ்டிரா அரசு விருப்பம் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மும்பையில் உள்ள ஏர்இந்தியா தலைமை கட்டிடம்

By

Published : May 7, 2019, 9:26 AM IST

மத்திய அரசிற்குச் சொந்தமான ஏர்இந்தியா நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. இதனால் ஏர் இந்தியாவை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதுகுறித்து பரீசிலிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

அதனால் நிதி நிலைமையை சமாளிக்க ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என நிதியமைச்சகத்திடம் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது. ஆனால் மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை. இதனால் கடனை அடைக்க இந்தியா முழுவதும் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்து கடனை அடைக்க முயற்சி செய்துவருகிறது ஏர் இந்தியா. இதனடிப்படையில் தென் மும்பை, நரிமன் பாயிண்டில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பழைய தலைமையக கட்டடத்தை விற்பனை செய்ய முன்வந்தது.


அரசு நிறுவனங்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், ஏர்இந்தியா கட்டடம் தொடர்ந்து அதே பெயரில்தான் இருக்கும் என்ற சில நிபந்தனைகளுடன் டெண்டர் விடப்பட்டது. டெண்டரில் குறைந்தபட்ச விலையாக ரூ. 1600 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கட்டடத்தை மகாராஷ்டிரா அரசு வாங்க தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது. மந்திராலயாவில் அம்மாநில தலைமைச் செயலர் மதன், இது தொடர்பாக விமான போக்குவரத்துச் செயலர் பிரதீப் கரோலா,ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் அஸ்வனி லோகானி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஏர் இந்தியா விமானம்


அப்போது ஏர் இந்தியா கட்டடத்தை ரூ. 1400 கோடிக்கு வாங்க தயாராக இருப்பதாக மாநிலச் செயலர் மதன் தெரிவித்தார். இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ. 200 கோடி குறைவாகும். மேலும் கட்டடம் வாங்கிவிட்டால் கட்டடம் முழுவதையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பகுதியை ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கனவே கட்டடத்தில் இருப்பவர்கள் உரிமம் முடிந்த பிறகு அனைவரையும் காலி செய்து விட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த கட்டடத்தை மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக நிர்வாகம் ரூ. 1375 கோடிக்கும், எல்ஐசி நிர்வாகம் ரூ. 1200 கோடிக்கும் கேட்டன. ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் அதிக தொகைக்கு கேட்டுள்ளது. இந்தக் கட்டடம் கிடைத்தால் மும்பை முழுவதும் பல்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்படும் அரசு அலுவலகங்கள் அனைத்தையும், ஒரே இடத்திற்கு கொண்டு வந்துவிட முடியும் என்று மாநில அரசு கருதுகிறது.


2013ஆம் ஆண்டு வரை ஏர் இந்தியா நிறுவனம் இந்தக் கட்டடத்தில்தான் செயல்பட்டது. அதன்பிறகு இதன் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details