இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுகாதாரப் பணிகளுக்கு இயங்கும் விமானங்களைத் தவிர அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வரும் மே 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவை சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. அதன்படி, சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றிவர போயிங் - 787 ரக ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை (ஏப்ரல் 18) மதியம் டெல்லி விமான நிலையத்திலிருந்து சீனாவின் குவாங்சோ நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து ஏர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 10 நாள்களில் மட்டும் சுமார் 170 டன் மருத்துவ பொருள்களை ஷாங்காய், ஹோங் காங் ஆகிய நகரங்களிலிருந்து ஏற்றிவந்துள்ளோம். வரும் வாரத்தில் மேலும் 300 டன் மருத்துவ பொருள்களை குவாங்சோ, ஷென்யாங் நகரங்களிலிருந்து எடுத்துவரவுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், 262 சிறப்பு விமானங்கள் மூலம் நாடு முழுவதும் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் ஆகிய விமான நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணியில் இதுவரை 407.4 டன் மருத்து உபகரணங்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:’வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது’