கரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,076 பேர் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் காலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நாட்டை பழைய நிலைக்கு மாற்றிடவும் மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகளை அனைத்து விமான சேவை நிறுவனங்களும் நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேபோல், ஜூன் 1ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படும் என்றும், ஜூன் 1ஆம் தேதி முதல் வெளிநாடு செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.