கரோனா வைரஸ் இறந்தவரின் உடலில் எவ்வளவு காலம் உயிர் வாழ முடியும், அப்படி இருந்தால் அதனால் நோய்த்தொற்று பரவுமா, என்று கரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய, ஆலோசனை நடந்து வருவதாக டெல்லி மருத்துவமனையின் தடயவியல் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா நேற்று (மே 21) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ’கரோனா வைரஸ் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு உதவியாக இருக்கும். இதற்காக இறந்தவரின் சட்ட வாரிசுகளிடம் தகுந்த ஒப்புதல் பெறப்படும். மேலும் நோயியல், நுண்ணுயிரியல் போன்ற பல்வேறு துறையும் இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளன. கரோனா ஒரு சுவாசத் தொற்று நோயாகும். இது சுவாசிக்கும் குழாய்கள் மூலம் பரவுகிறது என்று ஏபெக்ஸ் சுகாதார ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
இது முதல் முயற்சி என்பதால் இதற்குச் சரியான திட்டமிடல் வேண்டும். இது புதிதாக உருவான வைரஸ் இறந்த உடலில் எவ்வளவு நேரம் உயிர் வாழ்கிறது என்பதை அறிய இந்த ஆய்வு மிகவும் கண்டிப்பாக உதவும். இறந்த உடலில் இருக்கும் வைரஸ் நேரம் ஆக ஆக இறந்துபோகும். ஆனால், இது எவ்வளவு நேரத்தில் நடக்கும் என்று தற்போது உள்ள விஞ்ஞானத்தால் கூற முடியவில்லை. அதனால் சரியான முன்னெச்சரிக்கையுடம் நுணுக்கமான முறையில் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.