கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பாலன் மறைவிற்கு அதிமுக இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ . பன்னீர்செல்வம், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புதுச்சேரி அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என். பாலன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
அன்புச் சகோதரர் பாலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.