இந்தியாவின் பெரிய பாலைவனமான தார் பாலைவனம் முதற்கொண்டு பல பாலைவனப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டதுதான் ராஜஸ்தான். இங்கு ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ”தண்ணீரின் மதிப்பு தனக்குத் தெரியும் என பீற்றிக்கொண்டால், அவர் பொய் சொல்கிறார் அல்லது அவருக்கு சொந்த ஊரு ராஜஸ்தானாக இருக்கனும்” என்பதுதான் அந்த பழமொழி. இந்த பழமொழி மூலம் ராஜஸ்தானில் மக்கள் எந்தளவுக்கு தண்ணீர் பற்றக்குறையால் வாடிவருகின்றனர் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.
இங்குள்ள குழந்தைகளுக்குக்கூட தெரியும் தண்ணீரின் அருமை. தண்ணீரின் தேவை, அருமையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், ராஜஸ்தானில் நீங்கள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பார்கள். அப்படி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள ஊரான ஜாப்னர் பகுதி மக்கள் 25 ஆண்டு காலமாக தண்ணீர் பற்றாக்குறையில் தவித்துவந்துள்ளனர்.
அந்த தவிப்பின் தாகத்தைத் தீர்த்துள்ளது ஸ்ரீ கரண் நரேந்திர வேளாண் பல்கலைக்கழகம். அதன்படி நகராட்சி உதவியுடன் ஜவாலா மாதா கோயிலின் அருகில் உள்ள மலையிலிருந்து கீழே வரும் நீரை 33 லட்சம் லிட்டர் திறன் கொண்ட மூன்று குளங்களிலும், அதுவும் நிரம்பும் பட்சத்தில் மூன்று கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றோரு குளத்திலும் சேமித்துவருகின்றனர். இதன் மூலம் ஜாப்னர் கிராமம் மட்டுமின்றி அருகிலுள்ள கிராமங்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.