இந்திய - பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடிக்கடி போர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இங்குள்ள பல இளைஞர்கள் பயங்கரவாத, பிரிவினைவாத அமைப்புகளில் சேர்ந்து ஆயுதம் ஏந்தி வருகின்றனர். இதனால் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மூன்று இளைஞர்கள் மாற்றத்திற்கான விதையை விதைத்துள்ளனர். புல்வாமாவின் பிங்லெனா பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் 'ஃபால்கான்' என்ற இசைக்குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த குழுவிற்காக இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் அனைத்து உபகரணங்களையும் வாங்கியுள்ளனர்.
இது குறித்து இளைஞர் ஒருவர் கூறுகையில், 'காஷ்மீரில் கலைஞர்களை ஊக்குவிக்க அரசாங்கத்தால் எந்த ஆதரவும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான கலைஞர்கள் தங்கள் சொந்த பணத்தில் இசைக் கருவிகளை வாங்கி, நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்' என்றார்.