குடியுரிமை திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி முற்றிலுமாக எதிர்த்து வருகிறார். சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில், சிஏஏ எதிர்ப்புக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
அந்த வகையில், பெங்களூரு அருகே கல்புர்கியில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அக்கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஓவைசி, வாரிஸ் பதான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய வாரிஸ் பதான், 'இந்தியாவிலுள்ள 15 கோடி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்தால், 100 கோடி மக்களைக் காட்டிலும் பெரிய சக்தியாக உருவெடுப்போம்' என்றார்.
அவரின் இந்தப் பேச்சுக்கு, பாஜக தலைவர்கள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் தன் கட்சித் தலைவர் ஒருவர் இனவாத அடிப்படையில் பேசும்போது, ஓவைசி மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் கூறினர். இந்த விவகாரம் பெரிதாகவே பதானை மறு உத்தரவு வரும் வரை, செய்தியாளர்களிடம் பேசக் கூடாது என ஓவைசி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இனவாதம் பேசியதாகக் கூறி, பதான் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) கல்புர்கி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல் (153ஏ) ஆகிய இரு சட்டப்பிரிவுகளின் கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.