பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்துகொண்டானர்.
இதில், டெல்லி தேர்தல் தோல்வி, நாடாளுமன்றத்தில் கட்சியின் செயல்பாடுகள், மாநிலங்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்திற்குப்பின், மோடி, அமித் ஷா, நட்டா ஆகிய மூவர் மட்டும் தனியே முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதில், மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அத்துடன் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா நேற்று மோடியை சந்தித்த நிலையில், தனது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதன் யூகம் குறித்தும், கட்சியில் சிந்தியாவுக்கு என்ன பதவி வழங்கலாம் என்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:கொரோனா அச்சுறுத்தல்: மணிப்பூர் - மியான்மர் எல்லைப்பகுதி மூடல்