ஹத்ராஸ் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிராமத்தில் வசிக்கும் 236 தலித் குடும்பங்கள் பெளத்தத்தைத் தழுவின. இந்நிலையில், இந்த மதமாற்றத்தின் பின்னணியில் சதிச்செயல் இருப்பதாகவும், இரு சமூக பிரிவினரிடையே பகைமையை உருவாக்கி, சாதிய ரீதியிலான கலவரத்தைத் தூண்ட சிலர் முயற்சிசெய்து வருவதாகவும் மாண்டு சாண்டல் வால்மீகி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களின் பெயர், அவர்களின் முகவரி, எந்த தேதியில் மதமாற்றம் நடைபெற்றது என்பது குறித்து விவரங்கள் மதமாற்ற சான்றிதழில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இரு பிரிவினர் இடையே பகைமையைத் தூண்டுதல், மதமாற்றம் குறித்து வதந்திகளைப் பரப்புதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மாவட்டக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அம்பேத்கரின் கொள்ளுப்பேரன் ராஜ்ரத்னாவின் தலைமையில் கடந்த 14ஆம் தேதி, தலித் குடும்பங்கள் பெளத்தத்தைத் தழுவின. புத்திஸ்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா அவர்களுக்கு மதமாற்ற சான்றிதழ்களை வழங்கியது.