உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பஞ்சாப் 17ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாபில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து அதன் தாக்கத்தால் நீதிமன்றம், காவலர் அலுவலர், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான குல்பீர் சிங் ஜிரா, நிர்மல் சிங் சுத்ரானா ஆகிய இருவருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக இருவரும் பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒரு நாள் அமர்வில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, முதலமைச்சர் அரீந்தர் சிங்கை மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் முதலமைச்சரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இதுவரை 49 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 33 ஆயிரத்து 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதுவரை 15 ஆயிரத்து 63 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஆயிரத்து 307 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
அம்மாநிலத்தில் இதுவரை 3 அமைச்சர்கள் உள்ளிட்ட 32 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இதுவரை கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.