ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சிக்கான 13ஆவது ‘ஏரோ இந்தியா-21’ விமான கண்காட்சி, கர்நாடகா மாநிலம் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்த கண்காட்சி நுழைவுக்கான டிக்கெட் விற்பனை தற்போது ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதில், பார்வையாளர்கள் கண்காட்சி அரங்கில் குறைந்த நேரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பார்வையாளர்கள் 72 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட, கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழையும் சமர்பிக்க வேண்டும்.
மேலும் டிக்கெட்டின் விலையை பொறுத்தவரை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை அல்லது மதியம் 1:30 மணி முதல் 6 மணி வரை பார்க்க இந்தியர்களுக்கு 2500 ரூபாய், வெளிநாட்டவர்க்கு 75 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போக ஒரு நாள் முழுவதும் பார்க்க இந்தியர் ஒருவருக்கு ஐந்தாயிரம் ரூபாய், வெளிநாட்டவர்களுக்கு 150 டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை தாண்டி பார்வையாளர்கள் அதிக நேரம் இருந்தால், இந்தியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 150 டாலரும் அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...‘ஏரோ இந்தியா 2021’ விமான கண்காட்சிக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்