உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தீவிரமாகச் செய்துவருகிறது.
இந்நிலையில், ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்ற தீர்க்கமாகச் செயல்பட்டு, தனது அரசியல் வாழ்வில் பெரும்பகுதியைச் செலவு செய்த எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களிடம் பேசியபோது, அவர்கள் இருவருக்கும் இன்னும் அழைப்பு சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அத்வானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ”எந்தவொரு அமைப்பினரிடமிருந்தோ அல்லது கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளையிடமிருந்தோ அவருக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பிதழ் இல்லாமல் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என தெரிவித்தனர்.இதேபோன்ற கருத்துக்களே ஜோஷியின் நெருங்கிய வட்டாரமும் வெளிப்படுத்தின.