கடந்த 1967ஆம் ஆண்டில் விவசாயிகளின் புரட்சியால் உலகளவில் அறியப்பட்ட மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்க் மாவட்டத்தின் நக்சல்பாரி கிராமம் ’டிராகன் ஃப்ரூட்’ சாகுபடிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மாறிவருகிறது. நக்சல்பாரி கிராமத்தின் அருகே அமைந்துள்ள சிறிய கிராமமான ஹதிகிஷா டிராகன் பழ சாகுபடிக்கு பிரபலமானது. அதனைச் சுவைக்க வெவ்வெறு மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் அங்குப் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பழம் கொஞ்சம் இனிப்பு சுவை குறைவாகக் கொண்டுள்ளது என்றாலும், இதில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கரோனா பெருந்தொற்றை எதிர்க்கும் அளவுக்கு சத்துக்கள் இருப்பதாககவும் கூறப்படுகிறது. இந்தப் பழங்களை பயிரிட்டு சாகுபடி செய்து வரும் பழக்குடியினத் தம்பதியினரான பூஷன் டாப்போ, அவரது மனைவி அவா டாப்போ இது குறித்து தெரிவிக்கும்போது, கரோனா காலத்தில் இதன் விற்பனை அமோகமாக இருக்கிறது என்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால் இந்த பேரிடர் காலத்தில் டிராகன் பழத்தின் தேவையும், கூடவே அதன் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 ரூபாய் வீதம் தங்களது வீடு தேடி வந்து மக்கள் வாங்கிச் செல்வதாக அவா தெரிவிக்கிறார்.
முதலில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த இவர்கள், நார்த் பெங்கால் யுனிவர்சிட்டியில் மலர் வளர்ப்பு மற்றும் வேளாண் வணிக மேலாண்மை மையத்தில் (COFAM) இணைந்து டிராகன் பழ விவசாயம் செய்வது குறித்து பயிற்சிப் பெற்றுள்ளனர். அந்த சமயத்தில் வெறும் நான்கு டிராகன் கன்றுகளுடன் தங்கள் விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இப்போது கிட்டத்தட்ட 123 டிராகன் கன்றுகள் அவர்களது தோட்டத்தில் கொடியாக படர்ந்து கிடப்பதாகக் கூறி அவா டாப்போ புன்னகைக்கிறார்.