கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோரேகான் கலவரம் தொடர்பான சதி வழக்கின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த புரட்சிகர கவிஞரும், சமூக செயல்பாட்டாளருமான வரவர ராவ் உள்ளிட்ட 9 சமூகச் செயற்பாட்டாளர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரை இரண்டு ஆண்டுகளாக விசாரணை கைதியாகவே தனிமைச்சிறையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) வைத்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி உடல்நிலை மேலும் மோசமாகி சுயநினைவிழந்த நிலையில் கீழ விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை சிறை நிர்வாகம் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, புரட்சிகர கவிஞர் வரவர ராவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வரவர ராவை விடுதலைச் செய்யக் கோரி மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,"உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றிற்கு ஒரு தனிநபர் அச்சுறுத்தலாக இருக்க முடியாது. 81 வயதான ஒருவர் தான் என்ன குற்றத்தை செய்தார் என்பதை அறியாமல் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தவிக்கிறார்.
இப்போது அவர் மனதளவில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ உதவியும் குடும்பத்தின் அருகாமையும் தேவைப்படுகிறது. நீங்கள் தயவுசெய்து, இந்த விஷயத்தில் தலையிட்டு அவரது உயிரைக் காப்பாற்றுங்கள்.
இல்லையெனில் நமது வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்" என வலியுறுத்தியுள்ளார். கடந்த 22 மாதங்களாக விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பீமா கோரேகான் வழக்கின் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.