வளர்ச்சி ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு: ஆளுநர் கிரண்பேடி உத்தரவு - கவர்னர் கிரண்பேடி
புதுச்சேரி: வளர்ச்சி ஆணையராக இருக்கும் அன்பரசுக்கு கூடுதல் பொறுப்பாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை ஒதுக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி அரசின் முதுநிலை செயலர் அன்பரசு அனைத்து துறைகளுக்கிடையில், மத்திய அரசு குழுவுடனும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையராக இன்று (செப்டம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அன்பரசுவை உள்ளடக்கிய இந்த குழு, மத்திய குழுவுடன் நடத்தும் அனைத்து கூட்டுக் கூட்டங்களின் முடிவுகளை தினமும் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டி புதுச்சேரி நிர்வாகத்தின் அடுத்த மிக மூத்த அலுவலரை நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையராக நியமிப்பதன் மூலம் கரோனாவுக்கு எதிரான போர் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் இங்குள்ள தலைமைச் செயலாளருக்கு அடுத்த மூத்த அலுவலராக உள்ளார். மேலும் இது ராஜ்நிவாஸின் பரிந்துரையை கொண்டு, செயல்களை மேம்படுத்தவும், மத்திய குழு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடையே உயர்மட்ட ஒருங்கிணைப்பைக் கொண்டுவருவதற்கும் அவசியமானதாகக் கருதப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.