ஸ்ரெப்ரெனிக்கா இன அழித்தொழிப்பு
ஒரு மாபெரும் இன அழித்தொழிப்பு நிகழ்ந்து கால் நூற்றாண்டு காலம் உருண்டோடிவிட்டன. 1995ஆம் ஆண்டு ஜூலை 11 முதல் 16 வரை, சிறு நகரமான ஸ்ரெப்ரெனிக்காவில் ரத்த ஆறு ஓடியது. இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி அரக்கத்தனத்தால் 6 மில்லியன் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடுமைக்குப் பின்னர் ஐரோப்பா எதிர்கொண்ட கொலைக்களம்தான் ஸ்ரெப்ரெனிக்கா.
இது, சிதறுன்ட யூகோஸ்லாவியாவின் குட்டி நாடான போஸ்னியா-ஹெர்ஸெகோவினாவின் ஒரு சிறு நகரம். யூத இன படுகொலைக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிகழ்ந்த இனப் படுகொலை இதுதான். ஒவ்வொரு முறையும் இத்தகைய நரவேட்டை நிகழும்போது, அறிவுஜீவிகள் மத்தியில் நாம் திரும்பத் திரும்ப சம்பிரதாயமாக “இனிமேலும் இப்படி நடக்கக் கூடாது” என்பதைக் கேட்பது வாடிக்கையாகிப் போனது.
ஏனென்றால், அவை மீண்டும் அதே குரூரத்துடன் நிகழவே செய்கின்றன. ஸ்ரெப்ரெனிக்கா படுகொலை கூட, ருவாண்டாவில் அரங்கேறிய டுட்ஸி இன மக்களின் இன அழித்தொழிப்பை அடுத்து நிகழ்ந்துள்ளது. 1994ஆம் ஆண்டு ஏப்ரல்–ஜூலை காலகட்டத்தில்தான் 8 லட்சம் டுட்சி இன மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இன அழித்தொழிப்பு என்னும் மானிடப் பெருந்துயர் நிகழவே கூடாது. ஆனால், பல சமயங்களில், சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக ஏதும் செய்ய இயலாமல் கையறு நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, படுகொலைகள் நடந்தேறியுள்ளன. யூகோஸ்லாவியா உடைந்துபோன பின்பு அங்கு நிலவிய உள்நாட்டுப் போரின் விளைவாகவே 8 ஆயிரம் இஸ்லாமிய ஆண்களைக் காவு வாங்கிய இந்த இனப் படுகொலை அரங்கேறியது.
பாதுகாப்புக்கு அளிக்க தவறிய டச்சு படை; கொல்லப்பட்ட அப்பாவி இஸ்லாமிய ஆண்கள்
ஸ்ரெப்ரெனிக்காவைப் பொறுத்தவரை, அங்கு அமைதியை நிலைநாட்டவந்த டச்சு படை, உயிருக்குப் பயந்து அடைக்கலம் தேடிவந்த 300 போஸ்னிய இஸ்லாமிய ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியதால், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். கெஞ்சி கேட்டும், டச்சு படைகளின் காதுகளில் விழவே இல்லை. போஸ்னியாவின் செர்பிய ராணுவ தளபதியான ராட்கோ மிலாடிக்கின் படைகள், போக்கிடமற்ற அந்த அப்பாவி இஸ்லாமியர்களை நரவேட்டை ஆடியது.
இதில் கொடுமை என்னவென்றால், ஐக்கிய நாடுகள் அவை, ஸ்ரெப்ரெனிக்காவை ‘பாதுகாப்பு மண்டலமாக’ அறிவித்திருந்ததுதான். இந்த அறிவிப்பின் காரணமாக, புகலிடம் தேடிவந்த 8000 போஸ்னிய இஸ்லாமிய ஆண்கள், டச்சு படைகளும் கைவிட்ட நிலையில், போஸ்னிய செர்பிய படைகளால் குருவிகள்போல சுட்டுக் கொல்லப்பட்டனர். 2017ஆம் ஆண்டு, ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வு, டச்சு அமைதிப் படை இஸ்லாமிய ஆண்களின் படுகொலைக்கு உடந்தை என குற்றம் சாட்டியது.
வானிலை அறிக்கை போல முன்கூட்டியே தெரிந்தும் இன அழித்தொழிப்பைத் தடுக்க முடியவில்லை. ஏன்?
எந்த ஒரு இனப் படுகொலை நிகழவிருப்பதையும், வானிலை அறிக்கைபோல முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். யாருக்கும் தெரியாமல் நடைபெறுவது சாத்தியமல்ல. எப்போது எங்கு நடக்கப் போகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இல்லாமல் போவதில்லை. ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் வன்முறை வெறியாட்டம் வெடிக்கும் முன்னர், அங்கு ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்குத் தலைமை தாங்கிய கனடாவைச் சேர்ந்த மேஜர் – ஜெனெரல் ரோமியோ டல்லைர், மனித பேரவலம் காத்திருப்பது குறித்து அனுப்பிய செய்திகளில் தமது கவலையையும் அச்சத்தையும் தெரிவித்திருந்தார்.
ஆனால், உலக நாடுகளிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. நிகழவிருக்கும் படுகொலைகளுக்கான தெளிவான அறிகுறி, காட்டுத்தீயாக வளர்ந்து பரவும் வெறுப்பரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்தததுதான். ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தைக் குறிவைத்து, இடையறாது தாக்குதல் மேற்கொள்வதுடன், அச்சமூகத்தை மனிதத்தன்மையற்று மோசமாக இழிவுபடுத்துவதும் இதில் அடங்கும்.
இனக்குழுப் பகைமையைக் கூர்தீட்டிய தொலைக்காட்சி சேனல்
ருவாண்டா படுகொலைகள் அரங்கேறிய 1994 காலகட்டத்தில், இணையப் பயன்பாடு பெருமளவு புழக்கத்திற்கு வரவில்லை. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஒரு பத்தாண்டுகள் கழித்தே உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால், டுட்ஸி மக்களுக்கு எதிரான வெறுப்பரசியலை வளர்த்து இனக்குழுப் பகைமையைக் கூர்தீட்டியதில், அப்போது தொடங்கப்பட்ட ஆயிரம் மலைகளின் இலவச ரேடியோ–தொலைக்காட்சியின் (RTLM) பங்கு குறிப்பிடத்தக்கது.
இவை கூட ருவாண்டாவை ஆயிரம் மலைகளின் தேசம் என்று அழைப்பதை சுவீகாரம் செய்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்த ரேடியோ, ’கரப்பான் பூச்சிகளான டுட்ஸி மக்களை’ அழித்தொழிக்க வேண்டும் என வெளிப்படையாக தனது ஒலிபரப்புகள் மூலம் தீவிர பரப்புரை மேற்கொண்டது. வெறுப்பை உமிழ்ந்த இந்த ரேடியோவை தொடங்க நிதியுதவி அளித்து, தொடர்ந்து நடத்திய ஃபெலிஸியன் கபுகா அண்மையில் பாரிஸ் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதில் வியப்பு என்வென்றால், 84 வயதான கபுகா போலி அடையாளத்துடன் வசித்துவந்தது அம்பலமாகியுள்ளது.
அத்தகைய வன்மத்தின் பரவலும் வளர்ச்சியும், இன அழித்தொழிப்புக்கான மிகத் தெளிவான அறிகுறி என்றால், அதன் மூலமும் அடித்தளமும் கடல் அலையென எழுந்துவரும் அருவருக்கத்தக்க தேசியவாதம்தான் என்றால் அது மிகையில்லை. இதற்கு உதாரணம் தேடி வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. 1990களின் தொடக்கத்தில் செர்பிய அதிபராக பதவிவகித்த ஸ்லொபடான் மிலோசெவிக்கின் அரசியல் வளர்ச்சியைப் பார்த்தாலே போதும், இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். சிதறுண்ட யுகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த குடியரசுகள் அனைத்தின் மீதும் செர்பிய இனவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு முழு முதல் காரணகர்த்தா இந்த மிலோசெவிக்தான். இதில் மிகவும் கொடுமையான இன அழிப்பைச் சந்தித்தது ஸ்ரெப்ரெனிக்கா.
செர்பிய இனவாதத்தைக் கையிலெடுத்த மிலோசெவிக்
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியாக 1980களில் செயல்பட்ட மிலோசெவிக், தனது அரசியல் வளர்ச்சிக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றவும், ஆகச்சிறந்த வழிமுறையாக செர்பிய இனவாதத்தைக் கையிலெடுத்தார். கொசொவர்களுக்கு எதிராக அதனைக் கட்டமைத்தார். முதல்கட்டமாக, கொசொவோ தன்னாட்சிப் பிராந்தியத்தில் செர்பியர்கள் இன அழிப்பு அபாயத்தை எதிர்கொண்டு அச்சத்தில் வாழ்வதாக, மிலோசெவிக் 1986க்குப் பின்னிருந்தே பரப்புரை செய்துவந்தார்.
கொசொவோவில் உள்ள சிறுபான்மை செர்பியருக்கு ஆபத்து என்ற கற்பனையான கட்டமைப்பை முன்வைத்து, அகண்ட செர்பிய தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன் செயல்பட்டார். அகண்ட செர்பியா என்னும் இந்த விஷமத்தனமான செயல் திட்டத்தின் விளைவாக, இன அழித்தொழிப்பு அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக அவரது இனக்குழு தூண்டிவிடப்பட்டது. தொடர்ந்து, எதிராளியாகக் கட்டமைக்கப்பட்ட இனக்குழுவின் அழித்தொழிப்பில் இது முடிவடைகிறது.
செர்பியாவின் அதிபராக 1989இல் பதவியேற்ற மிலோசெவிக் எடுத்த முதல் நடவடிக்கை, கொசொவோவின் தன்னாட்சியைப் பறித்ததுதான். யூகோஸ்லாவியாவில் இருந்தபோதே, 1974இல் கொசொவோ தன்னாட்சி பிராந்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தன்னாட்சிப் பறிப்பு நடவடிக்கையே, யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த குடியரசுகளில் வெடித்த வன்முறைக்கான தொடக்கப் புள்ளி. இதே காலகட்டத்தில், கொசொவோவில் அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திவந்தார் பால்க்கன் பிரதேச காந்தியான இப்ராஹிம் ருகோவா.
அகிம்சை வழியில் வந்த கொடூரன்
கொசொவோ அதிபராக பின்னாளில் பதவிவகித்த இவர், பாரிஸில் புகழ்பெற்ற இலக்கியவாதியும் தத்துவவியலாளருமான ரோலண்ட் பார்த்ஸின் மாணவர்களுள் ஒருவராவார். இத்தகைய அகிம்சை வழி இயக்கத்தை, மிலோசெவிக் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை. மாறாக, கொசொவோ பிராந்தியத்தில் இருந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கட்டவிழ்த்துவிட்ட பொய் பிரச்சாரமும், பின்னர் அரங்கேறிய படுகொலைகளையும், இன அழித்தொழிப்பையும் நியாயப்படுத்துவதாக அமைந்தது பெரும் கொடுமை.
உலகில் இன அழித்தொழிப்பை முற்றாக நிறுத்துவதற்கு அரசியல் உறுதி இல்லாதது மனச் சோர்வையும் கடும் உளைச்சலையும் தருவதாக உள்ளது. கிடைக்கப்பெறும் தெளிவான அறிகுறிகள் அடிப்படையில் எந்த நாட்டில், எந்தப் பகுதியில் இனப்படுகொலை எப்போது நிகழவிருக்கிறது என்பது அரசியலைக் கூர்ந்து நோக்கும் எவருக்கும் புரியும்.
முன்னரே கூறியது போல, இன அழித்தொழிப்பிற்கான தொடக்கம், வெறுப்பரசியல் வளர்ந்து நிலைகொள்வதுடன், எங்கே தனிமைப்பட்டு விடுவோமோ என்ற ’தனிமைப்படும் அச்சத்தில்’ பெரும்பான்மையோர் அமைதி காப்பதிலும் இருக்கிறது. இதனை, பிரெஞ்சு தத்துவவியலாளரும் அரசியல் அறிஞருமான ஜேக்ஸ் ஸெமெலின் தனது ”சுத்திகரிப்பும் அழிப்பும்: படுகொலைகள், இன அழிப்புகளின் அரசியல் பயன்பாடு” என்ற நூலில், ஜெர்மானிய சமூகவியலாளர் எலிசபெத் னோயல் நூமன் அவர்களை மேற்கோள்காட்டி விரிவாக விவாதிக்கிறார்.
ஒரு இரவாது அச்சமின்றி உறங்கியிருப்பார்களா?
இந்த ‘தனிமைப்படும் அச்சம்’ காரணமாக, வெறுப்பு பரப்புரையில் நேரடியாக செயல்படாதவர்களும், அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களும் ஏன் வெறுப்பு அரசியலை விரும்ப்பாதவர்களும், இந்த விஷ விருட்சம் வேர்கொண்டு வளர்வதைக் கண்டிக்காமல், எதிர்த்துப் பேசாமல் அமைதியாக ஒதுங்கிவிடுகின்றனர். இவர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், இன அழித்தொழிப்பால் பாதிக்கப்படும் இனக்குழு மீது பரிவும் கரிசனமும் காட்ட பிரயாசைப் பட்டாலும், எங்கே தங்களது இனக்குழுவில் இருந்தே ஒதுக்கிவைக்கப்படுவோமோ என்று வாட்டும் பயத்தால் தேமேவென்று அடங்கி இருந்து விடுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் இன அழித்தொழிப்பு வரலாறு, துயரமும் மனச்சோர்வும் தருவது. தொடரும் இனப் படுகொலைகள் காரணமாக சர்வதேச சட்டத்தில், கடுகளவு என்றாலும், ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனப் படுகொலைகளைத் தடுக்க முடியாது போனாலும், எப்போதாவது குற்றவாளிகளைப் பிடித்து கூண்டில் நிறுத்தவாவது வாய்ப்பு வருகிறது. ஃபெலிஸியன் கபுகா, ஸ்லொபடான் மிலோசெவிக் மற்றும் ராட்கோ மிலாடிக் போன்றோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலும், பல குற்றவாளிகள் வாழ்வின் இறுதிவரை வாழ்ந்து, நீதியின் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். ஆனால், அவர்களெல்லாம் ஒரு இரவாவது அச்சமின்றி நிம்மதியாக உறங்கியிருப்பார்களா? சந்தேகமே!
இதையும் படிங்க: 'பாசிச கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்' - ராகுல் காந்தி தாக்கு!