17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகின்ற 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களுக்கு பாஜக சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திரை பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் ரஜினி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் நடைபெறும் 'தர்பார்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாளை அவர் மும்பை செல்கிறார். பின்பு வருகின்ற 30ஆம் தேதி அங்கிருந்து டெல்லியில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளார்.
இதேபோன்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அழைப்பிதழ் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் குறித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து இன்னும் அவர் முடிவு எடுக்கவில்லை என்றும், கமலஹாசனின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.