தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2020, 7:48 PM IST

Updated : Nov 14, 2020, 8:08 PM IST

ETV Bharat / bharat

பிகார் தேர்தல் முடிவுகள் : இடதுசாரிகளை நோக்கி நகரும் அரசியல் களம்!

பாட்னா : பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகளின் எழுச்சி, இந்திய அரசியல் களத்தில் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பிகார் தேர்தல் முடிவுகள் : இடதுசாரிகளை நோக்கி நகரும் அரசியல் களம் !
பிகார் தேர்தல் முடிவுகள் : இடதுசாரிகளை நோக்கி நகரும் அரசியல் களம் !

நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவானது பல்வேறு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்குமளவுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிகார் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும், முடிவு அறிவிப்பும் சற்றும் விறுவிறுப்புக்கு குறைவில்லாத வகையிலேயே அமைந்திருந்தன.

இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாகக் கருதப்படும் மகா கூட்டணியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட்டிருந்த இந்தத் தேர்தலின் முடிவினை நவம்பர் 11ஆம் தேதியன்று மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

முடிவில், முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ - என்டிஏ கூட்டணி பிகாரில் 125 இடங்களில் வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து களம் கண்ட எல்.ஜே.பி.யின் வாக்கு வங்கியானது கணிசமான அளவு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஆட்ட நாயகனாகக் கருதப்படும் தேஜஸ்வி பிரசாத் யாதவ் தலைமையிலான கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அவரது தலைமையில் களம் கண்ட மகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

மகா கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகள் 29 இடங்களில் போட்டியிட்டன.

அதில் சிபிஐ (எம்எல்) 12, சிபிஐ (எம்) 2, சிபிஐ 2 என்ற கணக்கில் வெற்றியை ஈட்டின. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், இடதுசாரிகள் 16 இடங்களை வெற்றிகொண்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான நபர்கள், நல்ல கல்விப் பின்னணியையும், சித்தாந்த பின்புலத்தையும் கொண்டுள்ளனர். களத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பிபுதிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஐ (எம்) வேட்பாளர் அஜய் குமார், அவரது பள்ளிப் பருவத்திலிருந்தே இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) ஊழியராக இருந்து வந்தவர் ஆவார்.

சமஸ்திபூரில் பிஆர்பி கல்லூரியில் படிக்கும்போது எஸ்.எஃப்.ஐ செயலராகவும் ஆனார். முன்னதாக அவர் உஜியார்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டார், ஆனால் வெல்ல முடியவில்லை.

அதேபோல், மாஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிப்பெற்ற சிபிஐ (எம்) வேட்பாளர் முனைவர் சத்யேந்திர யாதவ் கடந்த 1991ஆம் ஆண்டில் எஸ்.எஃப்.ஐ அமைப்பின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

சிபிஐ (எம்.எல்) கட்சியைப் பொருத்தவரை, அக்கட்சி பிகாரின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. போட்டியிட்ட 19 வேட்பாளர்களில், ஆறு பேர் 35 வயதுக்குள்பட்டவர்கள். 10 பேர் 50 வயதிற்குள்பட்டவர்கள். நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்த இளைஞர்களை இக்கட்சி அரசியலில் களமிறக்கியது.

அகியான் (தனித் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ (எம்.எல்) வேட்பாளர் மனோஜ் மன்ஸில், போஜ்பூர் மாவட்டத்தில் சாலையோரப் பள்ளி போன்ற கல்விக்கூடங்களை தோற்றுவித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்விப் பணியாற்றி வருகிறார். நிலமற்ற விவசாயிகள், தலித், சிறுபான்மையின மக்களின் குழந்தைகளுக்கும் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கவையாகும்.

கடந்த 1995 சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 26 இடங்களை வென்று, சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்டன. அதன் பின்னர் அக்கட்சிகளின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. செயல்திறன் மோசமடைந்தது. இதன் காரணமாக, 2000ஆம் ஆண்டு வாக்கில், இடதுசாரிகள் வெறும் ஐந்து இடங்களை மட்டுமே கைவசம் வைத்திருந்தனர்.

பின்னர் 2015ஆம் ஆண்டு தேர்தலில், மூன்று இடங்களை மட்டுமே இடதுசாரிக் கட்சிகள் வென்றன. அதுவும் அவை அனைத்தையும் சிபிஐ (எம்.எல்) கட்சி மட்டுமே தக்க வைத்திருந்தது. இரண்டு சிபிஐ வேட்பாளர்கள் ராம் ரத்தன் சிங், சூர்யா காந்த் பாஸ்வான் ஆகியோர் பெகுசராய் மாவட்டத்தின் டெக்ரா, பக்ரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தங்களது வெற்றியை உறுதி செய்தனர்.

இந்நிலையில், பிகாரின் ’லெனின்கிராட்’ என்று அழைக்கப்படும் பெகுசராய் மீண்டும் இடதுசாரிகளின் அசைக்க முடியாத கோட்டை என்பது தற்போது நிறுவப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களில் சிலருக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவை அரசியல் காரணங்களால் போடப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

பிகாரில் இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது குறித்து சமூகவியலாளர் டி.எம்.திவாகர் கூறியபோது, ​​“வேலையின்மை, பணவீக்கம், பணமதிப்பிழப்பு போன்ற பிரச்னைகள் மக்களைக் கடுமையாக பாதித்துள்ளன.

முன்னெச்சரிக்கையோ, முன்னேற்பாடுகளோ இல்லாத ஊரடங்கு, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. இடதுசாரி கட்சிகள் இந்தப் பிரச்னைகளை மக்கள் மையமாக்கினர். உண்மையில், குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளை இடதுசாரிக் கட்சிகள் பிரதானப்படுத்தி வேலை செய்தன.

சாமானிய மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு களத்தில் இறங்கிப் போராடின. சிபிஐ (எம்.எல்) கட்சியினர் வேலைநிறுத்தப் போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி செய்தனர்.

களப்பணியாளர்களைக் கொண்ட கட்சியாக இருப்பதால், சிபிஐ (எம்எல்) கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகளவு உள்ளது. இதனால் தான் அவர்கள் போட்டியிட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற அவர்களால் முடிகிறது. அது ஏழை மக்களின் கட்சி என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இடதுசாரிக் கட்சிகளின் அர்ப்பணிப்பும், மக்கள் மீதான நேசிப்பும் பிகாரிகள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றன. அவை வாக்குகளாக மாறின"எனக் கூறினார்.

Last Updated : Nov 14, 2020, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details