இந்திய விமானப்படை தொடங்கி 87 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் ஆண்டுவிழா இன்று கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த விழாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் அங்கு பழங்கால, தற்போதுள்ள நவீன ரக போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் புதிய விமானப்படைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ராகேஷ்குமார் சிங் பதாரியா, ராணுவத் தளபதி பிபின் ராவத், கப்பற்படைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த விழாவில் விமானப்படை சார்பில் விமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைசன் ரக விமானத்தில் சாகம் செய்தார். அப்போது அபிநந்தன் தலைகீழாக விமானத்தை இயக்கியபோது அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர். அபிநந்தன் தவிர்த்து பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற விமானிகளும் மூன்று மிராஜ் 2000, இரண்டு சு-30 எம்கேஐ விமானங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரின் புல்வாமாவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும்விதமாக இந்திய விமானப்படை சார்பில் பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 விமானத்தை துரத்திச் சென்று அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பின்னர் அவரது விமானத்தை சுட்டு அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு தினங்கள் கழித்து அபிநந்தனை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.