ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவு 2019 ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. அத்துடன் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, அம்மாநிலத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டனர். முக்கியமாக முன்னாள் முதலமைச்சர்கள் மெஹ்பூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்னதாக, வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.