டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 24 பேர் புதுமுகங்கள் ஆவார்கள். கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த 15 எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியப் பிரமுகர்களான ஆதிஷி கல்காஷ், ராகவ் சந்திரா ராஜேந்திர நகரிலும், திலீப் பாண்டே திம்மார்ப்பூர் தொகுதிகளிலும் களம் காண்கின்றனர்.
கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஆறு பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் தவிர காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது.
வேட்புமனு தாக்கல்செய்ய வருகிற 21ஆம் தேதி கடைசி நாளாகும். 22ஆம் தேதி வேட்புமனுக்கள் இறுதிசெய்யப்படும். அந்த வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள 24ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்தல் தொடர்பாக தனது சுட்டுரை (ட்வீட்டர்) பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “அனைவருக்கும் வாழ்த்துகள். தேர்தலை சாதாரணமாக நினைக்க வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டும். டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீதும் வேட்பாளராகிய உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்” எனப் பதிவிட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி அலை வீசியது. இதனால் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜகவுக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தது. காங்கிரசுக்கு பூஜ்யம் மட்டுமே கிடைத்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ஐந்தே ஆண்டில் 20 ஆயிரம் வகுப்பறைகள் கட்டியுள்ளோம் - அரவிந்த் கெஜ்ரிவால்