கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், விமான சேவை தொடங்குவது குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி, இம்மாதம் 25ஆம் தேதிமுதல் நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும். இதற்காக அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். விமான நிறுவனங்கள், ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளும் விமானப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகள் விமான சேவையின்போது பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டுதல்களையும், ஊழியர்கள், விமான நிறுவனங்களுக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.