ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனந்தா மெஹெர். தையல் வேலை செய்துவரும் அனந்தா, கடந்த 50 வருடங்களாக செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்ப தனது தொழிலில் மிகவும் நாணயமாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
32 அடி நீளமுள்ள கைத்தறி ஆடை! ஒரு முறை அனந்தாவிடம் துணி தைத்தவர்கள், அடுத்த முறை வேறு எந்த தையல்காரரிடமும் செல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு அனந்தா தனது தையல் கலையில் சிறந்து விளங்கியுள்ளார். வண்ண வண்ண துணிகளோடு தனது வாழ்க்கையை வாழும் அனந்தாவுக்கு இந்த ஆண்டுடன் தையல் பணியை தொடங்கி 50 வருடங்கள் நிறைவடைகிறது.
அனந்தா தனது 50 வருட நிறைவினைக் கொண்டாட முடிவு செய்து 32 அடி நீளமுள்ள பிரம்மாண்ட சாம்பல்பூரி கைத்தறி ஆடையை வடிவமைத்து தனது வீட்டின் முன் பொது மக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.
இது குறித்து, அனந்தா கூறும்போது, ‘50 வருட காலமாக தையல்காரராக பணியாற்றி வருகிறேன். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. 50 வருட நிறைவு விழாவைக் கொண்டாட முடிவு செய்து, 32 அடி நீளமுள்ள சம்பல்பூரி கைத்தறி ஆடையை வடிவமைத்தேன். கைத்தறி ஆடைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எனவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, 32 அடி நீளமுள்ள பிரம்மாண்ட சாம்பல்பூரி கைத்தறி ஆடையைத் தயாரித்தேன்’ என்றார்.