இந்தியாவின் அழைப்பை ஏற்று நேற்று டெல்லியில் நடைபெற்ற குடியுரசு தின விழாவில் பிரேசில் அதிபர் பொல்சோனாரோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஏராளமான உயர்மட்ட அலுவலர்கள், 59 தொழிலதிபர்களுடன் இந்தியா வந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆணாதிக்கவாதி, ஒருபாலினத்தவருக்கு எதிரானவர், தீவிர வலதுசாரி கொள்கைக்காரர் என பல்வேறு விமர்சனங்களுக்கு பெயர்பெற்ற பொல்சோனாரோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
2018ஆம் ஆண்டிற்கு பின்னரே பொல்சோனாரோ பிரேசில் அரசியலில் பெருஞ்சக்தியாக உருவெடுத்தார். எனினும் அதற்கு முன்பாக அந்நாட்டின் ஹவுஸ் அஃப் டெப்யூட்டீஸ் (House of Deputies) சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்ந்து ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரேசிலின் முன்னாள் அதிபர் லூலூ உள்ளிட்ட பல அரசியல் ஆளுமைகளின் தகுதி நீக்கமே, அவரை ஆட்சிக் கட்டிலுக்கு எளிதில் அழைத்து வந்தது.
இதையும் படிங்க : அமேசான் காட்டுத் தீ: பிரேசில் அதிபர் மீது ஏன் இத்தனை விமர்சனம்?
ஒரு ஜனநாயக நாட்டில் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பொல்சோனாரோ. ஆகையால் தான் அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தும் இந்தியா அவரை அழைத்தது.
வேறுபல நட்பு நாடுகளில் இருந்தும் பிரேசிலை இந்தியா தேர்ந்தெடுத்தற்கு என்ன காரணம் ? என நீங்கள் கேட்கலாம்
பிரிக்ஸ், இப்சா, ஜி-20, ஜி-4 என இந்தியா இடம்பெற்றுள்ள பல்வேறு அழைப்புகளில் பிரேசிலும் இடம்பெற்றுள்ளது. ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் இருநாடுகளும் ஒருவரையொருவர் ஆதரித்துள்ளன. ஐநாவில் எழுப்பப்படும் பயங்கரவாதம், அமைதி, எஸ்டிஜி ஆகிய பிரச்னைகளுக்கு பிரேசில் எப்போதும் இந்தியாவையே ஆதரித்துள்ளது.
2010ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் இரண்டு நாடுகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன. ஆனால் அதையடுத்து அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியா அதனை முந்திச் சென்றது. கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பொருளாதாரத்திலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மணப்பெண்ணைக் கடத்தி கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!
எனினும், உலகிலேயே அதிகளவில் இரும்பு தாது படிமங்கள் கொண்ட, சக்கரை, காபி, சோயா பீன்ஸை உற்பத்தி செய்யும் நாடு பிரேசில். 82 பில்லியன் பீப்பாய் அளவுக்கு அந்நாட்டில் கச்சா எண்ணெய் வளம் உள்ளது. வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழலில் நிலவிவரும் வேளையில் பிரேசிலின் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எத்தனாலும் பிரேசில் அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
இதுதவிர, பிரேசிலின் அமேசான் காடுகள் பல்லூயிர்களின், மருத்துவ குணங்கள் கொண்டு செடி கொடிகளின் சரணாலயமாக விளங்குகிறது. அதிகளிவில் இறைச்சி ஏற்றுமதி செய்யும், பால் சார்ந்த பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாகவும் இது திகழ்கிறது.
உற்பத்தித் துறையிலும் பிரேசில் பலமடங்கு முன்னேறியுள்ளது. மெர்கோசுர் ( MERCOSUR) அமைப்புடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தமிட்டுள்ளது. அந்த அமைப்பின் மிக முக்கிய நாடு பிரேசில்.
'பொல்சா ஃபமிலியா' திட்டம் மூலம் வருமானக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு அந்நாட்டு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. மாதாமாதம், குறிப்பிட்ட உதவித் தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். உதவித் தொகை பெறும் குடும்பங்களில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா என்பதை அரசு கண்காணித்து வருகிறது. இந்த முன்னெடுப்பு பாராட்டக்குரியது.
பொல்சோனாராவின் வருகையையொட்டி இருநாடுகளுக்கும் இடையே சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், விவசாயம், ஆற்றல் என பல்வேறு துறைகளில் 15-க்கும் அதிகமான ஒப்புந்தங்கள் கையெழுத்தியுள்ளன. இவை நம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
இதையும் படிங்க : இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்பட்டால் 2 நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறும்'