காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் சாத்தியம் உள்ளளவர்கள் என்ற பட்டியலில் பல்வேறு காங்கிரஸ் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், மல்லிகார்ஜுனா கார்கே, குலாம் நபி ஆசாத், முகுல்வாஸ்னிக் மற்றும் சுசில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் வலம் வந்தன. ஆனால், பட்டியலில் உள்ள இவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான சாத்தியம் என்பது தொலைதூரத்தில் உள்ளது.
இத்தகைய பரிசோதனை முயற்சியை முதலில் மேற்கொள்வது கடினம் என்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை அப்படி நடக்கும் பட்சத்தில், எவ்வளவு செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி.
காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுப்பது என்பது ஒரு புதிய யோசனை அல்ல. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அவருக்கு அடுத்து வந்த சீத்தாரம் கேசரி ஆகியோர் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முந்தைய காலகட்டமான 1998-க்கு முன்பு பதவியில் இருந்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய சிலவாரங்களில் கெலாட், ஷிண்டே, வாஸ்னிக் மற்றும் கார்கே ஆகியோரது பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிப்பட்டன. அப்போது கட்சியின் உள்வட்டாரத்தில், இந்த மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எதுவாக இருந்தாலும் ராகுல் தமது ராஜினாமா முடிவை திரும்ப ப்பெறும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாகத்தான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் இந்த மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் கட்சியின் அமைப்புகளில் முக்கியமான இடத்தில்தான் இருக்கின்றனர். தலைவர்கள், தொண்டர்கள் இருதரப்பினரும் ஒரே மாதிரியாகத்தான் கருதப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட மூத்த தலைவர்கள் முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக கட்சி தலைவராக இருக்கும்பட்சத்தில், அது விவேகமானதாக இருக்குமா என்று கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி பிரிவுகளில் இருந்து பின்னூட்டங்களைப் பெற முயற்சித்தனர். ஆனால் அந்தப் பெயர்கள் குறித்து இந்தியா முழுவதற்குமான கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அதிருப்தி, திருப்தி என்ற கலந்து கட்டிய முடிவாகத்தான் அது இருந்தது. காந்தி குடும்பம் சாராத ஒருவர் தலைவராக வரவேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
இந்த விருப்பம் , ஒரு வாய்ப்பாக அல்லது அதன் அமைப்பு காரணமாக சோனியா காந்தியிடமே வந்ததை அடுத்து, மீண்டும் இடைகாலத்துக்கு தலைவராக இருப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். முழு நேர கட்சித் தலைவர் ஒரு ஆண்டுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றிருக்கிறார்.
அடுத்த 12 மாதங்களில் ஒரு முழு நேர தலைவரைக் கொண்டு வருவதற்கு கட்சி தயாராக இருக்கிறதா என்பதில் ஒரு தெளிவு இல்லை. ராகுல் காந்தி திரும்ப தலைவராக வரவேண்டும் என்ற மறுபிரவேசத்தைச் சுற்றி ஒரு சலசலப்பு இருந்தாலும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் ஒரு கட்டமைப்பு உருவாகத் தொடங்கி இருக்கிறது.
எனினும், ராகுல் காந்தி தமது தாயிடம் இருந்து தலைவர் பதவியை மீண்டும் பெறுவதற்கு மனம் இல்லாத நிலையில்தான் இருக்கிறார். இதற்கிடையே கட்சிக்குள் ஒலிக்கும் சில சோனியா ஆதரவுக்குரல்கள், தொடர்ந்து சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடரும் சூழல் மிக அருகில் இருப்பதாக கூறுகின்றன.
கடந்த ஒரு ஆண்டில், மத்திய பிரதேசத்தில் மார்ச் 2020-ல் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை பா.ஜ.க கவிழ்த்ததையும் இளம் தலைவர் ஜோதிர்ஆதித்தியா சிந்தியா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கைப்பற்றிய அரசியல் விளையாட்டின் பா.ஜ.க-வின் முதல் வெற்றிக்கு எதிராக செக் வைக்கும் வகையில் எந்த ஒரு முயற்சியோ அல்லது சிறிய நகர்வோ மேற்கொள்ளாமல் கையறு நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர்.
ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்தைப் போன்ற ஒரு ஆபரேஷனுக்கு மீண்டும் ஒரு சாத்தியம் இருப்பதாக பல்வேறு எச்சரிக்கைகள் வந்தபோதிலும் கட்சி நிர்வாகிகள், அசோக் கெலாட் அரசை கவிழ்க்கும் வரை காத்திருந்தனர். ஜூலை மாதம் காங்கிரஸ் அதைத் தடுத்தது.