சீனாவில் தொடங்கி, தற்போது உலகமெங்கிலும் பரவியுள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முயன்றுவருகின்றன. இதற்கிடையில், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறி சமூக வலைதளவாசிகள் பல தகவல்களை பதிவிடுகின்றனர். இதனால், சில தவறான தகவல்களும் பரவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இதைத் தடுக்கும் நோக்கில், கேரள அரசு கோ.கே. (GoK direct) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், கொரோனாவின் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கிடைக்கும். இதனை மக்கள் தொடர்புத் துறையினர் வடிவமைத்துள்ளனர். இந்தச் செயலியை கேரள முதலமைச்சர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா நோய் பாதிப்பால், மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளிநாட்டிலிருந்து வருகின்ற பயணிகள், சாமானியர்கள் அனைவருக்கும் தேவையான கொரோனா குறித்த உடனடித் தகவல்களை ஜிஓகே செயலியில் அறியலாம்.