ஸ்ரீநகர்: பனி படர்ந்த ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது, தால் ஏரி. இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரில் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. இந்தப் பகுதியில் வசிப்போருக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் எப்போதும் சிக்கல் இருந்துள்ளது. ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் படகில் அமர்த்தி ஏரியைக் கடந்துதான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
நெடுங்காலமாக இருந்த இச்சிக்கலை நீக்க முடிவு செய்தார், அப்பகுதியில் வசிக்கும் சமூக செய்ற்பாட்டாளர் அகமது பட்லு. அவரது யோசனைதான் ’மிதக்கும் ஆம்புலன்ஸ்’.
அதென்ன மிதக்கும் ஆம்புலன்ஸ்?
இந்தப் பகுதியில் ஏற்கனவே உலகப் புகழ்பெற்ற மிதக்கும் சந்தை (Floating Market) அமைந்துள்ளது. அகமது அதைப் போலவே மிதக்கும் படகு ஆம்புலன்ஸ் சேவையை ஏற்பாடு செய்துவருகிறார். அதாவது ஏரிக்குள் படகு போன்ற அமைப்பிலான ’ஆம்புலன்ஸ் சேவை’.
”எனக்கு கரோனா பாதிப்பு உறுதியான சமயத்தில் என் அருகில் வருவதற்கே அனைவரும் பயந்தார்கள். இங்கிருந்து மருத்துவமனைக்கு சென்றுவருவதும் சிரமம். எந்த படகு உரிமையாளர்தான் கரோனா தொற்று இருப்பவர்களை தன் படகில் ஏற்றுவார். அப்போதுதான் இந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் தேவை என்ற யோசனை வந்தது”என்கிறார், அகமது.