அரசுத் திட்டங்களில் பெரும் பின்னடைவாகக் காணப்படுவது அதற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு தான். ஒவ்வொரு துறையிலும் முடங்கிக்கிடக்கும் நிதிகளைச் சரியாகக் கண்டடைந்து ஒதுக்கப்படும் பட்சத்தில், அனைத்து திட்டங்களும் சரிவர செயல்வடிவம் பெறும். இது குறித்த விவாதம் மத்திய பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டது.
மத்திய அரசின் திட்டமான போஷான் அபியான் திட்டத்துக்கு மாநில அரசுகள் தங்கள் கையிருப்பில் இருக்கும் நிதி முழுவதையும் சரியாகப் பயன்படுத்தக் கோரி சுற்றறிக்கை அனுப்பியது. பல்வேறு மாநிலங்கள் திட்டங்களை அமல்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், நிலையின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொண்டு செயல்படவில்லை என அத்துறையின் அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை பெயரளவிலேயே அமல்படுத்தியுள்ளதாகவும், கர்நாடகா, மேற்குவங்கம், ஹரியானா, பஞ்சாப், கேரளா, ஒடிசா, கோவா போன்ற மாநிலங்கள் இத்திடத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை ஒதுக்கியுள்ள நிதியான 3 ஆயிரத்து 769 கோடி ரூபாயில் 33 விழுக்காடான, ஆயிரத்து 58 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான தொகையே பயன்படுத்தியுள்ள நிலையில், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்கள் 10 விழுக்காட்டுக்கும் குறைவான தொகையையே பயன்படுத்தியுள்ளது.
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துவரும் மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க மாநில அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலமான கோவாவிலும் இதை நிலைமை தான். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான அலுவலர்கள் இல்லாததைக் காரணம் காட்டி, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் ஒதுக்கிவைத்துள்ளது கோவா அரசு. மேற்கண்ட மாநிலங்களை ஒப்பிடும்போது பஞ்சாப் மாநிலத்தின் செயல்பாடு ஓரளவு பரவாயில்லை எனலாம்.
சர்வதேச சுகாதார அமைப்பான லான்செட் நடத்திய ஆய்வின்படி போஷான் திட்டம் இந்தியாவில் சரிவர நடைமுறைப்படுத்தாத பட்சத்தில், பெரும் பாதிப்பை எதிர்காலத் தலைமுறையினர் மத்தியில் உருவாக்கும் என எச்சரித்துள்ளது. வளர்ச்சி குறைபாடு, உடல் எடைக்குறைவு, சேய் மற்றும் தாய்க்கு ஏற்படும் அனிமியா குறைபாடு போன்றவை, இந்தியாவின் எதிர் காலச் சிக்கல்களாக இருக்கும் என சர்வதேச நிறுவனத்துடன் இந்திய சுகாதார ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.