கும்பல் வன்முறையால் கைது
லக்னோவின் துண்டே கபாபி, சகாவத், ரஹீம், 30-க்கும் மேற்பட்ட 'அவதி' உணவு நிலையங்கள் சமீப நாள்களில் ஒரு புதுவித நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அவைகளில் பணியாற்றும் சமையல்காரர்கள், பராமரிப்பு ஊழியர்கள் பலர் தலைமறைவாக உள்ளனர். வங்கதேச இஸ்லாமியர்களான இவர்கள், இந்தப் பிரபலமான அசைவ வீதி-உணவகங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வசித்துவருகிறார்கள். அவர்களில் குறைந்தது 40 பேர் டிசம்பர் 19-20 தேதிகளில் கும்பல் வன்முறை காரணத்தால் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னை, அமைதியடைந்த பின்னரும் அது புதுவித பரிமாணத்தில் உருவெடுக்கலாம். உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மாநிலத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகத் திருப்புமுனைக் கதையை புனையலாம். வேட்டையாடும் எண்ணத்தில் காவல் துறை நடத்திய விசாரணையில் இதுவரை பல புரட்டுக் கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
சதி கோட்பாடு
அப்பட்டமான உளவுத் துறை தோல்வியை நியாயப்படுத்த முடியாமல், உ.பி.யில் வகுப்புவாத அமைதியின்மையை உருவாக்கும் நோக்கில், ஒரு சித்திரிக்கப்பட்ட சதித்திட்டத்தை வகுப்பதில் காவல் துறையினர் தங்கள் அனைத்து முயற்சியையும் செய்துபார்க்கின்றனர். பல இடங்களில் 40-50 வன்முறைக் கும்பல்கள் முகமூடி அணிந்து கூட்டத்தில் ஒன்றிணைந்து கற்களை வீசத் தொடங்கின. பொதுச் சொத்துகள் தாக்கப்பட்டு தீக்கிரையாகின. இது இறுதியில் கும்பல் வன்முறையைத் தூண்டியது. இதுவே காவல் துறையினருக்கு சதி கோட்பாட்டை உறுதிபடுத்த போதுமான காரணத்தை வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில காவல் துறைத் தலைவர் ஓ.பி. சிங் உள் துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், டெல்லியின் பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) வன்முறையின் சூத்திரதாரி என்று பதிவுசெய்து, அந்த அமைப்பிற்குத் தடை கோரியுள்ளது. அதன் மாநிலத் தலைவர் வசீம் அகமது உள்பட 23 பி.எஃப்.ஐ. ஆர்வலர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உ.பி.யில் பி.எஃப்.ஐ. செயல்பட்டுவருவதாகப் பலகட்ட விசாரணைகள் கூறுகின்றன. வங்கதேசத்திலிருந்து மூன்று முதல் நான்கு லட்சம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களிடையே இந்த அமைப்பு உறவை உருவாக்கிவருகிறது.
முகமூடி ஏன்?
வங்கதேசம் இளைஞர்களைக் கொண்டு லக்னோ, கான்பூர், வாரணாசி, பிஜ்னோர், மீரட், அலிகார், ராம்பூர், முசாபர்நகர் போன்ற நகரங்களில் பி.எஃப்.ஐ. மாவட்ட அளவில் குழுக்களை அமைத்தது. இது உண்மையாக இருந்தாலும், இது மற்றொரு உளவுத் துறை தோல்வியை சுட்டிக்காட்டுகிறது, ஏனெனில் இதற்கு முன்னர் எந்தவொரு காவல் துறை குறிப்பிலும் பி.எஃப்.ஐ. எனக் குறிப்பிடப்படவில்லை.
சிசிடிவி, செய்தி சேனல்களால் படமாக்கப்பட்ட பல காணொலிகளில் காணப்படுவதுபோல, ஏன் குற்றவாளிகள் தங்கள் முகங்களை மூடி வைத்திருந்தார்கள் என்பதிலிருந்தே காவல் துறை கோட்பாடு உருவாகிறது. பெரும்பாலான இஸ்லாமிய போராட்டக்காரர்கள் தங்கள் முகங்களை முகமூடியால் மறைக்கவில்லை. அப்படியானால், இந்த வங்கதேச இளைஞர்கள் மட்டும் மறைக்க காரணம் என்ன?
கைதுசெய்யப்பட்ட வங்கதேசத்தவர்கள் மீது ஏறக்குறைய இந்திய தண்டனைச் சட்டத்தின் 14 பிரிவுகளில் அல்லது அதற்கு மேற்பட்ட தேசத் துரோகம், கொலை முயற்சி, பொதுச் சொத்துகளை அழிப்பது போன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால் இங்கு பரிசீலிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், கிட்டத்தட்ட பயங்கரவாத நோக்கங்களைக் கொண்ட ஒரு நபர் தன்னை பொதுவெளியில் வேலைசெய்யும் சாதாரண ஊழியராகக் காண்பிப்பாரா என்ன?
மத்திய, மாநில அரசின் நம்பகத்தன்மை
வழக்கத்திற்கு மாறான வகையில் காவல் துறை மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. அதன்படி கலவரக்காரர்களிடமிருந்தும், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களிடமிருந்தும் சேதங்களின் செலவை மீட்பதற்கான ஒரு முயற்சியை எடுத்துள்ளது. முதலமைச்சர் யோகியின் உத்தரவுகளுக்கிணங்க, ரூ.300 கோடிக்கு மேல் மதிப்புள்ள பொதுச் சேதங்களின் செலவை ஏற்க ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் மாயாவதி அரசின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கு எதிராகக் காவல் துறையினர் நடந்துகொள்வதாகப் புகார்கள் உள்ளன. அது குறித்து தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. யோகி ஆதித்யநாத் தனது அடுத்த தேர்தல் பயணத்திற்காக இந்து வாக்கு வங்கியை பெரிதும் நம்பியிருப்பார்கள் என்று பாஜக எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.
காவி உடையணிந்த அரசியல்வாதி அதிகரித்துவரும் இஸ்லாமிய வெறுப்பு பற்றி கவலைப்படுவதில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இது மத்திய மாநில அரசுகள் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும் என்பதே பலரின் கவலையாக உள்ளது.
இதையும் படிங்க: உங்கள் வாக்கு யாருக்கு? - பெண்ணின் காந்தக் குரலால் திக்குமுக்காடும் டெல்லி!