இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மார்ச் மாத இறுதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், கர்நாடகாவில் ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் என அம்மாநிலக் கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த 10ஆம் வகுப்பு ஆங்கிலத்திற்கான தேர்வினை 98 விழுக்காடு மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய மேல்நிலைப் பள்ளிகளுக்கான தேர்வு வாரியத் தலைவர் சுமங்கலா, ''10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கு 7 லட்சத்து 85 ஆயிரத்து 140 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 877 மாணவர்கள் தேர்வினை எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் இவர்களுக்கு 2 ஆயிரத்து 878 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் பேசுகையில், ''ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்துவருகிறது. அதனால்தான் ஆங்கில தேர்வில் 98 விழுக்காடு மாணவர்கள் பங்கேற்றனர். இதேபோல் ஜூலை 4ஆம் தேதி வரை அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தேர்வு மையங்களில் அரசின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் அனைவரும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் தேர்வில் வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் ஏன் தேர்வில் பங்கேற்கவில்லை என்ற காரணம் கேட்கப்படும். சிபிஎஸ்இ அல்லது மற்ற மாநிலங்களைப் போல் தேர்வுகளை ரத்துசெய்வதற்கான பேச்சுக்கே இடம் இல்லை. நிச்சயம் தேர்வுகள் நடக்கும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுக்கென தனியாக மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய பின் ஒவ்வொரு மையத்தின் வெளியிலும் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:இந்தியாவின் தவப்புதல்வனுக்குப் புகழஞ்சலி - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்