நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம், ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கியதிலிருந்து எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தினை கேட்டார்.
அதற்கு பதிலளித்த பியூஷ் கோயல், '' மாநில காவல் துறையினர் கொடுத்த தகவலின்படி, கரோனா வைரஸ் ஊரடங்கின்போது செப்.9ஆம் தேதி வரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்த 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த 97 பேரில் 87 பேர் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இதய நோய், மூளையில் ரத்தக்கசிவு, நுரையீரல் நோய், கல்லீரல் பாதிப்பு ஆகிய நோய்களால் உயிரிழந்துள்ளனர். இதைப்பற்றி மாநில காவலர்கள் சட்டப்பிரிவு 174இன் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்'' என்றார்.
முன்னதாக மக்களவையில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் கரோனா வைரஸ் காலத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவிற்கு காரணம் இதுதான்... ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சிறப்பு பேட்டி!