நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக சென்ற ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ ஏவியது. பூமியில் இருந்து அதிக தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த விண்கலம், கொஞ்சம் கொஞ்சமாக நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது.
இது நிலவின் சுற்று வட்டப் பாதையில் இருந்தபோது, இம்மாதம் 2ஆம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்ட இந்த விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது. அதன் இறுதியாக இன்று அதிகாலை 1.40 மணி முதல் 1.55 மணிக்குள் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சரித்தர நிகழ்வைக் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு நேரில் வருகை தந்திருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவே விழிப்புடன் காத்திருந்த நிலையில், விக்ரம் லேண்டரின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. முழுவதுமாக தரையிறக்கப்படுவதற்கு சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், எந்த சமிக்ஞையும் இல்லாமல் ஆனது விக்ரம் லேண்டர்.