டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சராசரியாக தினமும் 87 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவில் குற்றங்கள் - 2019" என்ற அறிக்கையில் 2018ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 3.78 லட்சமாக இருந்ததாகவும், இவை கடந்த வருடம் 7.3 விழுக்காடு அதிகரித்து 4.05 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரிகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் (30.9%) கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. மேலும், பெண்கள் மீதான தாக்குதல் (21.84), பெண்களைக் கடத்தல் (' 17.9%), மற்றும் பாலியல் வன்புணர்வு (7.9%) போன்றவை அடுத்தடுத்த பிரிவுகளாக உள்ளன.
நாட்டில் உள்ள பெண்களின் மக்கள் தொகையைக் கணக்கிடும்போது, 2018ஆம் ஆண்டில் 58.8ஆக இருந்த குற்ற சம்பவங்களின் விகிதம், கடந்த 2019ஆம் ஆண்டில் 62.4ஆக அதிகரித்துள்ளது. மாநிலங்கள்வாரியான குற்ற வழக்குகளில் உத்தரப் பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் முதன்மை மாநிலமாக உள்ளது.