உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ளது உன்னாவ் மாவட்டம். பல்வேறு காரணங்களுக்காக பல மாநிலங்கள் பிரபலமடைந்துவரும் நிலையில், இந்த மாவட்டமோ பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பிரபலமடைந்துள்ளது. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 86 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அந்த மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக 185 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மற்றொரு பெண்ணை குற்றவாளிகள் உயிரோடு எரித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அசோஹா, அஜ்கெயின், மகி, பங்காருமாவு உள்ளிட்ட பல இடங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பெரும்பாலான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் வெளியே உள்ளனர் அல்லது தலைமறைவாக இருக்கிறார்கள்.
மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு காவல் துறையினர்தான் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் ஹிரிதே நாராயண் திக்சீத், சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பாதக், மக்களவை உறுப்பினர் சாக்சி மகாராஜ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.