கேரள மாநிலம் கோழிக்கோடு கஸ்பா காவல்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 10ஆம் தேதி காவலர்கள் விசாரணை நடத்த ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தனர். அப்போது அந்த வீட்டின் அருகே, மூன்றாவது படிக்கும் சிறுவன் உமர் நிதர் காவலர்கள் அருகில் வந்தான்.
அவனிடம் காவலர்கள் என்ன என்று கேட்பதற்குள், 'என்னிடம் ஒரு புகார் உள்ளது' என்று ஒரு தாளை நீட்டினான் சிறுவன் உமர் நிதர்.
ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டிருந்த அந்தப் புகாரில், “தனது மூத்த சகோதரி உள்பட ஐந்து சிறுமிகள் என்னுடன் விளையாட மறுக்கிறார்கள். அவர்களுடன் லூடோ, இறகுப் பந்து, திருடன்-போலீஸ் என எந்த விளையாட்டுக்கும் என்னைச் சேர்த்துக்கொள்வதில்லை. நான் ஒரு பையன் என்பதால் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்” எனக் கூறியிருந்தான்.
அப்பாவி சிறுவன் அளித்த புகாரால் அதிர்ச்சியடைந்த காவலர்கள், அவனது வீட்டிற்குச் சென்றனர். அப்போதுதான் காவலர்களுக்கு உண்மை தெரியவந்தது. அன்றைய தினம் காலையில் சிறுவன் வழக்கம்போல் தனது மூத்த சகோதரி, சிறுமிகளை விளையாட அழைத்துள்ளான். ஆனால் யாரும் வரவில்லை. மாறாக அவனை விளையாட்டுக்கும் சேர்த்துக் கொள்ளவில்லை.
இது தொடர்பாக அவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். அவரோ விளையாட்டாக, “போய் கோ டா... போய்... போலீசுல சொல்லு” எனக் கூற, அக்கணம் அண்டை வீட்டுக்கு விசாரணைக்கு காவலர்கள் வர, சிறுவன் நேராக அவர்களிடம் சென்றுவிட்டான்.
உண்மை தெரியவர, அந்தப் புகாரை திரும்பத் திரும்ப பார்த்து புன்னகைத்தபடி கடந்துசென்றனர் காவலர்கள் உமேஷ், நிராஸ். மேலும் சிறுவனின் மனதையும் தேற்றினர்.
இதையும் படிங்க: 'கரோனா இயற்கையானதல்ல' - நிதின் கட்கரி