அமெரிக்கா, தலிபான் இயக்கத்திற்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்படை தாக்குதலில் சிக்கி அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வான்படை தாக்குதலானது ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான நங்கர்ஹரில் நிகழ்ந்தது. இதுகுறித்து பிராந்திய ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதவ்லா கோக்யனை கூறுகையில், "சுற்றுலாவுக்குச் சென்று திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்" என்றார்.
ஆப்கான் ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அதில், அப்பாவி மக்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் தலிபான் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தாக்குதல் சம்பவங்களை குறைத்துக் கொள்வதாக அமெரிக்க, தலிபான் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.