குருகிராமில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய இளைஞர் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது திருமணத்திற்காக பிகார் மாநிலம் பாட்னாவிற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்குக் காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இருப்பினும், அவர் கரோனா பரிசோதனை செய்யாமல் திருமணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், திருமணம் முடிந்த இரு நாள்களில் அவர் உயிரிழந்துவிட்டார். மேலும், அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யாமலேயே அவருடைய உறவினர்களிடையே உடல் ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் அவருடைய உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்குக் கரோனா தொற்று பரவியது.
இதில், 79 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், பிகாரில் பெரிய தொற்றுச் சங்கிலியை அடையாளம் கண்டு தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இவர்கள், மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவியது. இத்திருமணத்தின் மூலம் தொற்று பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் திருமணத்தில் பின்பற்றப்படாததும், அலுவலர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததுமே அப்பகுதியில் அதிக பேர் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:இறந்த உடலுடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை!