இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி - மால்வியா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் பிரபல பீட்சா உணவகம் ஒன்றில் டெலிவரி பாயாகப் பணியாற்றுகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தெற்கு டெல்லி மாவட்ட நீதிபதி பி.எம்.மிஸ்ரா கூறுகையில், "பீட்சா உணவகத்தில் டெலிவரி பாயாகப் பணிபுரியும் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் பணியாற்றும் 16 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர் பீட்சா டெலிவரி செய்த வீடுகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அப்படி இதுவரை 72 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் உள்ளவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்துதல் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்துப் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைத்து டெலிவரி பாய்களும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது"
ஜொமேட்டோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர் பணியாற்றிவந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'வெளவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்' - ஐ.சி.எம்.ஆர்