டெல்லி : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கும் விதமாக, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரையின் பெயரில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பியது. அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள்கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்., 15ஆம் தேதி மீண்டும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர், இந்த சட்டமுன் வரைவுக்கு ஒப்புதல் அளிக்காததால், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும், இன்னும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது. கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் ஐந்து பேர் ஆளுநரைச் சந்தித்து இது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
இந்த உள் இடஒதுக்கீடு சட்டம், இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால், 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 300 இடங்கள் கிடைக்கும்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயசுகின் என்ற வழக்கறிஞர், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'கடந்த 2014-15 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பிற்கான 5 ஆயிரத்து 750 இடங்களில், 37 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. 2015-16ஆம் ஆண்டில் 24; 2016ஆம் ஆண்டில் 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. 2017ஆம் ஆண்டில் 7, 2018ஆம் ஆண்டில் 5ஆக இருந்த இந்த எண்ணிக்கை; 2019ஆம் ஆண்டில் 2ஆக குறைந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த செப்., 15 ஆம் தேதி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக சட்டம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. தமிழ்நாடு ஆளுநர் அதன் மீது முடிவெடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என அதில் கோரியுள்ளார்.
நவராத்திரி விடுமுறை முடிந்து வரும் 27 அல்லது 28 தேதிகளில், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :பாஜகவின் பிகார் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை - சொல்கிறார் திமுக எம்எல்ஏ!