பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கியது. டெல்லி வன்முறை, கொரோனா போன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், சபாநாயகரின் இருக்கைக்கு சென்று அவரிடமிருந்து ஆவணங்களை பிடுங்கியதாக ஏழு காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவை விதிகளை மீறியதால் மீதமுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதுகுறித்த தீர்மானத்தை அவையில் நிறைவேற்றி கவுரவ் கோகாய், டி.என். பிரதாபன், குரியகோஸ், மாணிக் தாகூர், ராஜ்மோகன் உன்னிதான், பென்னி பெஹான், குர்ஜித் சிங் அஜிலா உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.