கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி உஷோதி செங்குப்தா. இவர், 2010ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் அழகிப் பட்டத்தை வென்றவர்.
இந்நிலையில், நேற்று இரவு பணிமுடித்துவிட்டு சக ஊழியர் ஒருவருடன் டாக்ஸியில் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்.
இந்த டாக்ஸி நகரின் மத்தியில் உள்ள எல்கின் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த 15 இளைஞர்கள் , அதனை துரத்திச் சென்று நிறுத்தியுள்ளனர்.
பின்னர், அந்த டாக்ஸியின் ஓட்டுநரை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உஷோதி டாக்ஸியைவிட்டு கீழே இறங்கி சத்தம் போட்டு, அச்சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பின்னர், லேக் கார்டன் பகுதியில் டாக்ஸி சென்றுகொண்டிருக்கும் போது, அதனை ஆறு இளைஞர்கள் மீண்டும் பின் தொடர்ந்துள்ளனர்.
இந்த முறை, கார் மீது கல்வீசியும் உஷோதியை காரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து அவரின் போனை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, உஷோதி போட்ட சத்தத்தில் அக்கம்பகத்தினர் வெளிவரவே, அங்கிருந்து அந்த இளைஞர்கள் தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து உஷோதி தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'சம்பவத்தின் போது அருகிலிருந்த காவல்துறையிடம் நான் புகார் அளித்தேன். அதற்கு அவர்கள் அப்பகுதி தங்கள் எல்லைக்குப்பட்டதல்ல எனக் கூறி, என்னை வெவ்வேறு காவல்நிலையத்துக்கு அலைக்கழித்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைக்கவசம் அணியாமல் எப்படி 15 இளைஞர்கள் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பியுள்ள அவர், தனக்கு நடந்த சம்பவம் பிறருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.இந்தப் பதிவு வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கொல்கத்தா காவல்துறையினர், ஷேக் ராஹித், ஃபர்தின் கான், எஸ்.கே. சபீர் அலி, எஸ்.கே. காணி, இம்ரான் அலி, எஸ்.கே. வசிம், ஆதிஃப் கான் உள்ளிட்ட ஏழு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவம் குறித்து தீவர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மற்ற இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கொல்கத்தா கூடுதல் காவல்துறை ஆணையர் பிரவீன் திரிபாதி தெரிவித்துள்ளார்.