இந்தியாவில் சினிமா துறைக்கான பெருமை மிகுந்த விருதான மத்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகளுக்கான பெயர் பட்டியல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் வெளியிடுவது வழக்கம். தேசிய திரைப்பட விருது வாங்குவது நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு பெரும் கனவாக இருக்கிறது. 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த படங்களின் பட்டியல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
66ஆவது தேசிய திரைப்பட விருது வெளியிடுவதில் சிக்கல்
66ஆவது தேசிய திரைப்பட விருது வென்றவர்களின் பெயர் பட்டியல் மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது, ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகே 66ஆவது தேசிய விருதுகளுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் சினிமாவில், பரியேறும் பெருமாள், 2.O, செக்கச் சிவந்த வானம், இரும்புத்திரை, வடசென்னை, மேற்குத் தொடர்ச்சி மலை, 96 ஆகிய படங்கள் விருதுக்கு விண்ணப்பித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
65ஆவது தேசிய விருதுகளுக்கான பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, விருது வழங்கும் விழா மே 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.