கரோனாவின் தாக்கம் உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்துவருகிறது. இருப்பினும், ஒரு சில பகுதிகளில் அதன் இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக அச்சம் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் கரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனையில் கூடுதலாக 663 படுக்கைகள் அதிகப்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் அதிகரிக்கும் கரோனா: மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை! - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: தேசிய தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனையில் கூடுதலாக 663 படுக்கைகள் அதிகப்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கிழக்கு டெல்லியில் அமைந்துள்ள ஜிடிபி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜிடிபி மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். அடுத்த இரண்டு நாள்களில் கூடுதலாக 238 அவசர சிகிச்சைக்கான படுக்கைகளை அதிகரிக்க அவர்கள் ஒத்துக் கொண்டனர். அடுத்த ஒரு சில நாள்களில், டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் கூடுதலாக 663 படுக்கைகளை அதிகரிக்கப்படும்.
பாதிப்பு அதிகரித்தபோதிலும், மருத்துவர்கள் சூழ்நிலையை சிறப்பாக கையாண்டனர்" என்றார். டெல்லி முதலமைச்சருடன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் ஆய்வு மேற்கொண்டார். அக்டோபர் 28ஆம் தேதி, ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000 தாண்டியது. நவம்பர் 11ஆம் தேதி மட்டும், 8,000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.