ஆந்திரப் பிரதேச காவல் துறையினர் காணாமல்போன குழந்தைகளை மீட்டு எடுக்கும் வகையில் 'ஆபரேஷன் முஸ்கான்' என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் 16 ஆயிரத்து 457 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 631 குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் முஸ்கான்' என்பது தொலைந்துபோன குழந்தைகளை மீட்பது மட்டுமல்லாமல், அவர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் உறுதிபடுத்துவதை நோக்கமாக கொண்டது என்று காவல் அலுவலர் ஒருவர் கூறினார்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகள் நலக் குழுவுடன் இணைந்து கடந்த ஒருவாரத்தில் 16,457 குழந்தைகளை ஆந்திர காவல் துறையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் குழந்தைத் தொழிலாளர்கள், தெருக்களில் வசிக்கும் குழந்தைகள், அனாதைகள், வீட்டை விட்டு ஓடியவர்களும் அடங்குவர்.
16,457 குழந்தைகளில், 13,588 ஆண் குழந்தைகளும், மீதமுள்ள 2,869 பெண்கள் குழந்தைகள் அடங்குவர். மீட்கப்பட்டவர்களில் சில குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர், மற்றவர்கள் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஆந்திர மாநில காவல் துறை கடந்த ஜனவரி மாதம் 'ஆபரேஷன் முஸ்கான்' தொடங்கியது. இதன்மூலம் இதுவரை தென் மாநிலம் முழுவதும் மொத்தம் 25 ஆயிரத்து 298 குழந்தைகளை மீட்டுள்ளது.